எழுத்துரு அளவு    

ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள்
ஸ்தலபுராணம்

அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய். அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு சென்றார். அங்கே குசேலருக்கு நடந்ததை விட பன்மடங்கு உபசாரம் செய்தார் கிருஷ்ணர். எப்பொழுதும் இவன் என் பக்தன் என் பக்தன் என்று கூறிக் கொண்டே இருந்தார் கிருஷ்ணபரமாத்மா. பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கண்ணன், அதற்கு வேங்கடகவி மறுபடியும் ஊத்துக்காட்டில் 'நான் பாடி நீ ஆடவேண்டுமடா கண்ணா' என்று கேட்டார். அவ்வாறாகவே மீண்டும் இருவரும் ஊத்துக்காட்டிற்கு வந்தார்கள். பக்தா உனக்கு நான் எப்படிக் காட்சி தர வேண்டும் எனக் கேட்டார். அதற்கு வேங்கடகவியும், காளிங்க நர்த்தனாகவே வா என்றார். அவ்வாறாகவே வந்து உன்னால் உன் வாயால் என் நர்த்தனத்திற்கு ஏற்றாற்போல் எப்பொழுது பாட முடியவில்லையோ அப்பொழுதே நான் இதே இடத்தில் மீண்டும் விக்கிரகமாக மாறிவிடுவேன் என்று கூறினார். வேங்கடகவி அப்பொழுது

'தாம்தீம் தரநதாம்............' என்று தொடங்கும் பாட்டை பாடினார்.

பாடல் முடியும் வரை பாடலுக்கு ஏற்றாற் போல் கிருஷ்ணனும் நர்த்தனம் செய்தார். நர்த்தனத்திற்கேற்றாற்போல் வேங்கடகவியும் பாடினார். இருப்பினும், சில நர்த்தன பாவனைகளுக்கு ஏற்றாற்போல் வேங்கடகவி பாட முடியாமல் தடுமாறினார். உடனே, கிருஷ்ணன் சொன்னது போல் அதே இடத்தில் மீண்டும் விக்ரகமாக மாறினார். வேங்கடகவி தன் தோல்வியை ஒப்பு கொண்ட பிறகு, அவர் அவதார நோக்கத்தை கூறி பின்பு நாரதராக மாறி வைகுண்டம் சென்றார் வேங்கடகவி.

இந்த விக்கிரகத்தில் லோகத்தில் எந்த ஒரு சிற்பியாலேயும் செய்ய முடியாத ஒரு அதிசயம் நடந்திருக்கின்றது. எப்படியென்றால் நாகத்தின் சிரசு மேல் தன் பாதத்தை படாமல் வைத்திருக்கிறார். பெருமாளோடு பாதத்துக்கும் நாகத்தோடு சிரசுக்கும் எந்த அளவு பிடிமானம் இருந்தால் இந்த கிருஷ்ணன் நிற்பதற்கு போதுமானதாக இருக்குமோ அவ்வளவு பிடிமானம் இல்லை. மிகமிக குறைவாகவே இருக்கின்றது. இந்த விக்கிரத்தினுடைய கணமானது திருமஞ்சன சமயத்தில் நானும் எனது தந்தையும் சேர்ந்து நகர்த்த முயன்றால் தான் நகற்றவே முடியும். அவ்வளவு கணமான கிருஷ்ணனுக்கு தேவையான பிடிமானம் இல்லை. இது விக்ரகத்தின் தனிச் சிறப்பு.

வைகுண்டத்தை விட்டு விட்டு கண்ணன் இங்கேயே இருப்பதால் எப்பொழுதும் அவனுடன் கூடி இருக்கும் கோபிகாஸ்ரீகளை இரவு நேரங்களில் இங்கே வரவழைத்து அனுதினமும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான் கண்ணன் அதற்கு ஆதாரமாக கண்ணனின் கொலுசு சத்தம் உனக்கு கேட்டிருக்குமே, என்று பெரிய சிரிப்புடன் புராணத்தைக் கூறி முடித்தார் அந்த பெரியவர். இனிதே ஸ்தல புராணம் முடிவுபெற்றது.

கண்ணன் விக்ரஹம் கிடைக்க பெற்ற காளிங்க மடு
காளிங்க மடு (நீர் இல்லாத பொது) காளிங்க மடு (நீர் இருக்கும் பொது)இனி, இன்னும் கண்ணன் இங்கு இருந்து கொண்டிருக்கின்றான் என்பதற்கு ஆதாரமாக கடந்த 10 வருடங்களுக்குள் தன்னை நாடி வந்த பக்தர்களிடம் அவர்கள் பிரார்த்தனைகளையும், வியாதிகளையும், சுவாரசியமாக அவர்களிடம் விளையாண்டு அந்த வியாதிகளையும், பிராத்தனைகளையும் எப்படி நிறைவேற்றினார் என்று உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன். ஒரு அறிவியல் விஞ்ஞானி வாழ்க்கையில் விஞ்ஞானத்தால் சாதிக்க முடியாத விஷயத்தை சாதித்து முடித்திருக்கிறார், கண்ணன். அந்த பக்தரின் பெயர் கிருஷ்ணன். பாரிஸ் நகரில் தற்போது வசித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் நீலாங்கரையில் ஒரு வீடு உண்டு. அவருடைய மகளுக்கு திருமணமாகி 11 வருடங்களாகக் குழந்தை பாக்கியமில்லை. ஆம் எங்கேயோ கேள்விப்பட்டு நமது கிருஷ்ணரை தரிசிப்பதற்காக வந்தார். எங்களிடம் என் மகளுக்கு திருமணமாகி 11 வருடங்களாக குழந்தை இல்லை. எத்தனையோ மருத்துவரிடமும், எல்லா சந்நிதிக்கும் சென்றாகிவிட்டது இந்த கிருஷ்ணனாவது அனுக்ரஹம் செய்யட்டும் என்று பக்தியும் சற்று விரக்தியுமாகவே பேசினார். கிருஷ்ணனிடம் உத்தரவு கேட்டு அருள் வாக்கின் மூலம் சிலப் பரிகாரங்கள் கூறப்பட்டது. கண்ணனுக்கு மாதாமாதம் ரோஹிணி நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்புகிறோம் என்று கூறினோம். அதற்கு அரை மனதாகவே சம்மதித்தார். 3 மாதங்கள் நல்லபடியாக பிரசாதம் வந்து சேர்ந்தது. நான்காவது மாதம் பிரசாதம் கிடைத்தவுடன், அரங்கேறியது அவரது வாழ்வின் அதிசயம். மருத்துவர்கள் உங்கள் மகள் கர்ப்பமாய் உள்ளார் என்று உறுதி கூறினார். அதன் பிறகு தொடர்ந்து பல மாதங்கள் பிரசாதம் சென்றன. அவர் எவ்வளவோ சந்நிதிக்கு சென்று பிரார்த்தித்திருக்கலாம். ஆனால் நமது கண்ணனின் அனுக்ரஹத்தினாலேதான் குழந்தை கிடைத்தது என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறினர். யாரும் எதிபாராதவிதமாக சுமார் 12 மணி அளவில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போது ரோகிணி நட்சத்திரமாகவும், அஷ்டமி திதியாகவும் இருந்தது. அதிசயத்தில் ஆழ்ந்து உடனே எங்களுக்கு போன் பண்ணி எங்களுக்கும், கிருஷ்ணருக்கும் மனமார நன்றி கூறினார். அன்றிலிருந்து ஊத்துக்காடு கிருஷ்ணரின் தீவிர பக்தனாக இருந்து கொண்டிருக்கிறார்.

மீண்டும் அவரது வாழ்விலேயே அதிசயம் ஏற்ப்பட்டது. அவருடைய மருமகளுக்கு திருமணமாகி 9 வருடமாக குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மீண்டும் நமது சந்நிதிக்கு வந்து கண்ணனை பிரார்த்தித்தார். அவர் பிரார்த்தனைக்கிணங்க ரோகிணி நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்து 5 மாதங்கள் பிரசாதம் வந்து சேர்ந்தது. 6வது மாதம் பிரசாதம் கிடைக்க சற்று தாமதம் ஆனது. எங்களுக்கு போன் செய்து இந்த மாதம் பிரசாதம் அனுப்பிவிட்டீர்களா? என்று கேட்டார். ஓரிரு நாட்களில் தங்களுக்கு கிடைத்துவிடும் என்று கூறினோம். எதேச்சியாக வேறொரு காரணத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவர் மருமகள். பரிசோதனைக்கு பிறகு அதை உறுதி செய்தார் மருத்துவர். அனைவரிடமும் கூறினார், அந்த சமயம் வாசலிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அழைத்தது தபால்காரன். உங்களுக்கு கடிதம் வந்திருக்கிறது என்று கடிதத்தை நீட்டினான் தபால்காரன். வாங்கி பார்த்தவர்கள் அனைவரும் அதிசயித்து போனார்கள். வந்திருப்பதோ கண்ணனின் பிரசாதம். மருமகளுக்கும் அதே போல் இரவு 12 மணி ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் குழந்தை பிறந்தது. அன்றிலிருந்து இன்று வரை கிருஷ்ணனின் தீவிர பக்தனானார். கிருஷ்ணனை மட்டுமே வணங்கும் பக்திநிலை அவருக்கு ஏற்பட்டது. இன்றும் பெருமுயற்சி செய்து அவரால் முடிந்ததை கண்ணனின் திருப்பணிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி 14 வருடங்களாக, புத்திர பாக்கியம் இல்லாத ஒரு பக்தரின் கதையைப் பார்ப்போம். அந்த பக்தரின் பெயர் சிவராமக்கிருஷ்ணன். அவர் சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திருமணமாகி 14 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. சில ஜோதிடர்கள் மூலம் ஜாதகம் பார்த்து தமிழ்நாட்டில் பல கோவில்களுக்கு பல பரிகாரங்களை செய்துள்ளார். இருப்பினும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நமது கிருஷ்ணர் அனுக்கிரஹம் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டார். ஜாதகமோ விதியோ கிருஷ்ணனிடம் தோற்றுப் போகும். விதிக்கும் ஜோதிடத்துக்கும் மற்ற தேவதா உபாசகர்களுக்கும் கட்டுப்படுத்த முடியாதவன் அவன் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே நிரூபித்து காட்டியுள்ளார். எதேச்சையாக திருகருகாவூர் சென்று கர்ப்பரட்சாம்பிகை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் அதை கவனித்த ஒரு பக்தர் என்ன விஷயம் என விசாரித்தார். அவர் தன் குறைகளை அவரிடம் கூறினார். அவர் நமது கிருஷ்ணன் அனுக்கிரஹத்தை ஏற்கனவே பெற்றிருப்பவர். அவர் ஊத்துக்காடுக்கு ஒரு முறை சென்று பிரார்த்தித்து வர சொன்னார். அவ்வாறாகவே கண்ணனை தேடி சன்னதியில் சரண் புகுந்தார். அருள்வாக்கின் மூலம் சில பரிகாரங்கள் கூறப்பட்டது. நல்லபடியாக அதேபோல் ரோகிணி நட்சத்திரத்தில் அதே இரவு 12 மணி அளவில் அவருக்கு குழந்தை பிறந்தது.

இதே போல் பல ஆயிரம் பேர்களுக்கு அதிசயிக்கும் விதத்தில் புத்திர பாக்கிய குறையை நீக்கியுள்ளார். அதை பற்றி மற்றொரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம். மருத்துவர்களால் தீர்த்து வைக்க முடியாத சில பிரச்சனைகளை நமது கண்ணன் தீர்த்து வைத்துள்ளான். அதைப்பற்றி சில வார்த்தைகள். சேலம் மாவட்டம் கொங்கலாம்பட்டி என்ற ஊரில் கே.கே.மோகன்தாஸ் என்பவரின் மனைவிக்கு நடந்த அதிசயம். தற்போது அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறார். ஓரிரு வருடங்களுக்கு முன்னாள் தீராத முதுகுதண்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். பெரிய மருத்துவமனையில் காண்பித்தும் கூட எந்த மருத்துவர்களாலும் முழுத் தீர்வை தர இயலவில்லை. இறுதியாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகா சந்நிதியை நாடி வந்தார். அங்கே மனமுருகி பிராத்தனை பண்ணி கொண்டிருந்தார். தரிசனம் முடிந்து சந்நிதியை விட்டு வெளியே வரும் தருவாயில் அங்கே இருவர் ஊத்துக்காட்டில் கிருஷ்ண தரிசனம் நல்லபடியாக கிடைத்தது என்று பேசிக்கொண்டே அந்த பெண்மணியைக் கடந்து சென்றார்கள். அந்த பெண்மணி அவர்களை நிறுத்தி அய்யா, தாங்கள் ஊத்துக்காட்டு கிருஷ்ணன் என பேசிக்கொண்டு வந்தீர்களே! அவன் யார்? அவர் சன்னதி எங்கே இருக்கிறது? என்று கேட்டிருக்கிறாள். அவர்கள் கூறிய விவரங்களின் படி இந்த சன்னதியில் தரிசிக்க வந்தாள். நாங்கள் தீபாரதனை செய்து கொண்டிருக்கும் தருவாயில் அழுது கொண்டே தரிசனம் செய்து கொண்டிருந்தாள். நாங்கள் அம்மா ஏன் அழுகிறீர்கள் என்று விசாரித்தோம். அப்பெண்மணி தன் முதுகு தண்டு பிரச்சனையை கூறி நான் இருந்து என் கணவருக்கும் பிரயோஜனம் இல்லை, என் பிள்ளைகளுக்கும் பிரயோஜனம் இல்லாததால் தற்கொலை செய்ய போவதாக கூறினார். சற்று பொறுங்கள், இவ்வளவு நாட்கள் பொருத்துவிட்டீர்கள்! இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணனது ஸ்ரீ ஜெயந்தி உற்சவம் வெகு விமரிசையாக நடக்க இருக்கிறது. அதை கண்டுகளித்த பிறகு, நீங்கள் உங்கள் முடிவை செயல் படுத்த ஆரம்பிக்கலாம் எனக் கூறினோம். அவ்வாறாகவே அவர்களும் ஆனந்தமாக கண்ணணின் உற்சவத்தை கோலாகலமாக கண்டுகளித்தார்கள். அவர்கள் ஊருக்கு செல்ல கும்பகோணம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு தற்காலிக நாட்டு மருந்து வைத்திய சாலையை கண்டார்கள். அருகில் சென்று என்னவென்று பார்க்க எதோ ஒரு சக்தி தூண்டியது. வைத்தியரிடம் சென்று தன் பிரச்சனைகள் பற்றி கூற எதோ ஒரு சக்தி தூண்டியது. அதன் படியாகவே அந்த பெண்மணி தன் பிரச்சனையை மருத்துவரிடம் கூறினார். அந்த மருத்துவர் நான்கு சிறிய பொட்டலங்களைக் கொடுத்து நான்கு நாட்கள் இம்மருந்தை சாப்பிடவும், அதற்குள்ளாகவே தங்கள் பிரச்சனை தீர்ந்து விடும் என்று கூறியும், பிரச்சனை தீரவில்லை எனில் மீண்டும் என்னை தொடர்பு கொள்ளவும் என தன் முகவரியை கொடுத்தார். முகவரியும், மருந்தும் பெற்றுக்கொண்டு ஊருக்கு திரும்பி சென்றாள். நடந்த அதிசயம் 4 நாளுக்குள்ளாகவே முதுகு தண்டு பிரச்சனை முற்றிலுமாக தீர்ந்தது. ஓரிரு மாதங்களாக அந்த பிரச்சனை அவர்களுக்கு மீண்டும் வரவேயில்லை. அந்த மருத்துவருக்கு நன்றி கூற வேண்டுமென நினைத்து அவர் முகவரியைத் தேட ஆரம்பித்தாள். முகவரி சீக்கிரமாகவே கிடைத்தது. அதை பார்த்தபோது தான் அதிசயத்தில் உறைந்து போனாள். நன்றி சொல்ல வேண்டியது மருத்துவருக்கு அல்ல, நமது கிருஷ்ணருக்குதான் என்று அதை பார்த்த வார்த்தைகளால் முடிவு செய்தாள். அவர் படித்த வாசகம் அந்த மருத்துவரின் பெயர் முத்துகிருஷ்ணன் என்று எழுதி இருந்தது. நாங்கள் கூறியது அந்த பெண்மணிக்கு ஞாபகம் வந்தது. உடனே ஊத்துக்காடு கிளம்பி வந்து கிருஷ்ணனை தரிசித்து ஆனந்த கண்ணீர் விட்டாள். இந்த கண்ணீரை மட்டும்தான் அவன் எதிர்பார்ப்பான். தங்களால் முடிந்தவரை திருப்பணிக்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறார். இன்று வரை மீண்டும் அப்பெண்மணிக்கு அபபிரச்சினை வரவே இல்லை.

சென்னையிலிருந்து மதிய வேளையில் எங்களுக்கு ஒரு போன் வந்தது. எனது கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் தான் உயிரோடிருப்பார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. அந்த கிருஷ்ணருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்புங்கள் என்று கூறினார். அவ்வாறே செய்தனுப்பினோம். பிரசாதம் அவர்களுக்கு கிடைத்தது. உடனே உடல்நலத்தில் முன்னேற்றம் கண்டு ஓரிரு நாட்களில் முழுவதும் உடல்நிலை சரியாகி வீடு திரும்பினார். அன்றிலிருந்து 5 வருடங்கள் நலமாக இருந்தார். பின்பு மரணமடைந்தார். உயிர் போவது என்பது யாராலும் மாற்றப்படக் கூடியது அல்ல. யாரும் மாற்றவும் கூடாது. அந்த பெண்மணி கண்ணனின் மீது வைத்துள்ள அபார நம்பிக்கையின் காரணமாக தன்னை நம்பியவர்களுக்கு ஒருகாலும் தோல்வி வரக்கூடாது என்பதற்காகவும் அதே சமயத்தில் விதி முடிந்திருப்பவரை காப்பாற்றுவதும் சரியல்ல. அதற்காக 5 வருடங்கள் உயிரோடு இருக்க வைத்து தன்னிடம் அழைத்துக் கொண்டார். தர்மத்துக்கும் புறம்பாகது தன் பக்தனின் வேண்டுகோளையும் நிறைவேற்றிவிட்டார் அந்த மாயக்கண்ணன். இதுபோல், இன்னும் பல அதிசயங்களை தொடர்ந்து கூறுகிறேன்.

இதே போல் மதுரையிலிருந்து ஒரு மருத்துவர் விவாகத்தடைக்காக கண்ணனை தரிசிக்க வந்தார். எங்களிடம் குறைகளைக் கூறினார். கிருஷ்ணனிடம் நாங்கள் கேட்டதற்கு பரிகராம் ஒன்றும் கூறவில்லை. மாறாக நல்லபடியாக சீக்கிரம் நடக்கும் என்பதை பதிலாகக் கூறு என்பதே உத்தரவானது. நாங்கள் அவ்வாறாகவே கூறினோம். அவர் மனமுருகி தரிசித்து கொண்டிருக்கும் சமயத்திலேயே சென்னையிலிருந்து ஒரு குடும்பம் தரிசிக்க வந்தார்கள். அவர்களும் விவாகத்தை வேண்டித்தான் வந்தார்கள். அவர்கள் பெண் வீட்டுகாரர்கள். இருவரும் அங்கேயே பார்த்து பேசி திருமணம் சந்நிதியிலேயே நிச்சயிக்கப்பட்டது. திருமணமும் நல்லபடியாக முடிந்தது. இது போல் ஆயிரமாயிரம் அதிசயங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறான். அது அத்தனையும் ஒவ்வொன்றாக மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். இதைக் கூறுவதற்காகவே என் வாழ்நாளை கழிக்க உள்ளேன். தொடர்ந்து கூறுகிறேன். உங்களிடம் உள்ள கிருஷ்ண பக்தியை வெளியில் கொண்டுவர முயல்கிறேன்.

இப்படிக்கு
கிருஷ்ணதாசனாக
J.சுந்தர்ராம பட்டாச்சாரியார்


previous page


இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது / வலைத்தளத்தின் போலிகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்கள், 2013ல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்டவை.
கோவில் வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

https://AcadooGhostwriter.com