எழுத்துரு அளவு    

ஊத்துக்காடு வேங்கடகவி
வேங்கடகவி

இந்த கிருஷ்ணனையும், இந்த ஷேத்திரத்தையும் பற்றி 12 ஆழ்வார்களும், தன்னுடைய பாசுரங்களில் குறிப்பிடவில்லை. 12 ஆழ்வார்களும் தாங்கள் இயற்றிய பாசுரங்களில் குறிப்பிடவில்லையே என்ற வருத்தத்தை ஒருவர் அவதரித்து தான் இயற்றிய பாடல்கள் மூலமாக தீர்த்து வைத்தார் என்பது அந்த பாடல்களை கேட்கும் பொழுது, கேட்பவர் அறியாமலையே அவர்கள் மனது கிருஷ்ணனின் பக்கம் செல்வதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்ற இரண்டு கன்றுகளும் பிரம்மாவின் சாபத்தால் சிவ தொண்டும், விஷ்ணு தொண்டும் செய்வதற்காக பூலோகத்திற்கு வந்தன. இந்த ஊத்துக்காடுக்கு சற்றே அருகில் உள்ள பட்டீஸ்வரம் திருகோவிலில் உள்ள சிவபெருமானுக்கு ஆராதனம் செய்வதற்குண்டான புஷ்பங்களை பறித்துக் கொடுக்கும் தொண்டினை தொடர்ந்து செய்து கொண்டு வந்தன. ஊத்துக்காட்டிலிருந்து அந்த புஷ்பங்களைப் பறித்து இந்த சிவனுக்கு சேர்த்துக் கொண்டிருந்தன. அப்பொழுது, ஊத்துக்காட்டில் வேத நாராயண பெருமாள் ஆலயம் மிக சிறிய ஆலயமாக இருந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட பிராமணர்கள் வசித்து வந்தார்கள். மதிய வேளையில் இரண்டு கன்றுகளும் ஓய்வெடுப்பதற்காக இந்த ஊருக்கு வரும். அக்காலத்தில் மதிய வேளையில் ஓய்வு சான்றோர்களிடம் சென்று பகவத் குண விசேஷ கதைகளை கேட்டறிவதே ஆகும். அப்படி அந்த கன்றுகளுக்கு தினம் தினம் ஒவ்வொரு சரித்திரமாக ஒரு பெரியவர் கூறிக் கொண்டிருந்தார். அன்றைய தினம் எவ்வளவு நேரம் தேடியும் அந்த பெரியவர் கன்றுகளுக்கு கிடைக்கவில்லை. சோர்ந்து போய் ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தன அந்த கன்றுகள். இதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நாரத மகரிஷியிடம் காமதேனு என் குழந்தைகள் சீக்கிரம் என்னை வந்து சேர அனுக்கிரகியுங்கள் என்று பிராத்தித்ததற்கிணங்கி நாரத மகரிஷி அந்த கன்றுகள் முன் பிராமண வேஷத்தில் காட்சி கொடுத்தார். நாரத மகரிஷி அந்த கன்றுகளைப் பார்த்து. 'ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அந்த கன்றுகள் தாங்கள் அந்த பெரியவரை தேடி அலைந்ததைப் பற்றிக் கூறின. அதற்கென்ன, இன்றைய தினம் நான் உங்களுக்கு கதை கூறுகிறேன் எனக் கூறினார். மகிழ்ச்சியுற்று அந்த கன்றுகள் அமர்ந்து சிஷ்ய பாவத்துடன் கேட்கத் தொடங்கின.

பிராமண வடிவில் உள்ள நாரத மகரிஷி, பாகவதத்தில் தசமத்கந்தத்தைக் கூற ஆரம்பித்த உடனேயே தன் மனதை பூரணமாக பறிகொடுத்தன அந்த கன்றுகள். தொடர்ந்து பல பால லீலைகளைக் கூறிக் கொண்டு வந்தார். அதிலும் விசேஷமாக, காளிங்க நர்த்தனத்தை மிக விரிவாக கூற திருஉள்ளம் கொண்டார். அவ்வண்ணமே கூறி முடித்தார். இதைக் கேட்ட கன்றுகள் அழ ஆரம்பித்துவிட்டன, என்னே? அந்த சின்ன கண்ணன், காளிங்கன் என்ற சர்ப்பத்தின் மேல் நர்த்தனமாடினானா? அவன் பாதங்கள் வலித்திருக்குமே! அவனால் அதை எப்படித் தாங்க முடிந்தது என அழத்தொடங்கின, அந்தக் கன்றுகள். நாரத மகரிஷி எவ்வளவு சமாதானம் சொன்னாலும் அதன் அழுகையை நிறுத்த முடியவில்லை. அந்த இரண்டு கன்றுகளுடைய பூர்வ ஜென்மபிரம்மாவின் சாபத்தையும், அதனால் அவதரித்த நோக்கத்தையும் எடுத்துரைத்தும் கூட அந்த கன்றுகள் கேட்பதாக இல்லை. தொடர்ந்து கண்ணனை நினைத்து அழுது கொண்டே இருந்தது. நாரத மகரிஷி பிராமண வேஷத்தை கலைத்து நாரதர் என்று காண்பித்தும் கூட அக்கன்றுகள் அழுகையை நிறுத்துவதாக இல்லை. கன்றுகளே! என்ன செய்தால் உங்களுடைய வருத்தம் நீங்கும் என்று கூறுங்கள் என்றார் நாரதர். அதற்கு அந்தக் கன்றுகள் அந்த கண்ணன், காளிங்க நர்த்தனம் செய்ததை மீண்டும் பார்க்க வேண்டும். அவருக்கு வலித்ததா? என கண்ணனிடம் கேட்க வேண்டும் என்று கூறியது. நாரதர், கன்றுகளே! இது என்னால் முடியாத காரியம், உங்கள் தாயாரை அழைத்து கேளுங்கள் என்றார். அந்த கன்றுகளின் பிரார்த்தனைக்கிணங்க காமதேனு இந்த இடத்துக்கு இறங்கி வந்தாள். காமதேனுவாலும் சமாதனம் பண்ண முடியவில்லை. உடனே நாரதரும், காமதேனுவும் வைகுண்டத்திற்கு சென்று மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர். அதற்கு மஹா விஷ்ணு அப்படியா, என் கதைக் கேட்ட இரு கன்றுகள் அழுது கொண்டிருக்கிறதா? அப்படியொரு பக்தர்களா? என்று வியந்து அவர்களுக்காக நான் மறுபடியும் காளிங்க நர்த்தனம் செய்து காண்பிக்கிறேன் என்று மூவரும் பூலோகம் கிளம்பினார்கள்.

மஹா விஷ்ணுவின் அருளால் ஒரு வடுவை உருவாக்கி மீண்டும் காளியனை வரவழைத்து நர்த்தனம் ஆடிக்காண்பித்தார். நர்த்தனமாடியதால் தனக்கு வேதனையில்லை என்றும் காளியனுக்குத் தான் வேதனை என்றும் அனுக்கிரகம் பண்ணினார். இதைக் கண்டு அத்தனை தேவர்களும் மெய் மறந்து போனார்கள். என்னே? விஷ்ணுவின் அனுக்ரஹம், தன் பக்தனுக்காக மறுபடியும் பூலோகம் சென்று நர்த்தனம் ஆடி காண்பித்து இருக்கிறாரே! என்று வியந்து பூமாரி பொழிந்தார்கள். அத்துணை தேவர்களும் இந்த சேஷத்திரத்திற்கு இறங்கி வந்து தாங்கள் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இடம் என்ன பாக்கியம் செய்திருக்கிறது என்று மெய் மறந்தார்கள். அந்த சமயம் அந்த கன்றுகள் கிருஷ்ணரை நீங்கள் இப்படியே இங்கயே இருக்கும்படியாக வேண்டினார்கள். அவ்வாறே அத்தனை தேவர்களும் வேண்ட பஞ்சலோக விக்கிரகமாக மாறினார் கிருஷ்ணர்.

நாரதரே! அந்த விக்ரகத்தை வேத நாராயண பெருமாள் திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். கோலாகலமாக பிரதிஷ்டை நடைபெற்றது. கன்றுகளுக்கு பிரம்மாவின் சாபம் நீங்கி மோஷம் கிட்டின. தேவர்கள் தங்களது இருப்பிடத்திற்கு சென்றார்கள். ஆனால் இந்த பிரதிஷ்டையை செய்த நாரதருக்கு இந்த விக்ரகத்தைப் பார்த்து திரும்பி செல்ல மனம் வரவில்லை. ஒரு ஜென்மமாவது இந்த கிருஷ்ணனுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமென எண்ணி வைகுண்டம் சென்று விஷ்ணுவிடம் தன் கோரிக்கையை எடுத்துரைத்தார். அதற்கு மஹா விஷ்ணு வைகுண்டத்தில் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, பின் எதற்கு அங்கு செல்ல வேண்டும் என்றார். அதற்கு நாரதர் மிகவும் பவ்வியமாக நீங்கள் இங்கே மகாவிஷ்ணுவாக இருக்கிறீர்கள், அங்கேயோ கிருஷ்ணனாக அல்லவா! இருக்கிறீர்கள், அதுவும் தன் பக்தனுக்காக மீண்டும் கிருஷ்ணாவதாரம் எடுத்துள்ளீர்கள். என்னை உங்களுக்கு தொண்டு செய்ய அனுக்கிரகியுங்கள் என பிரார்த்தித்தார். அதற்கு மஹாவிஷ்ணு சில காலங்கள் கழித்து வேங்கடகவி என்ற திருநாமம் கொண்டு அந்த ஷேத்திரத்தில் அவதரித்து என் மீது பல சங்கீர்த்தனங்களை பாடுவாயாக! என்று அனுக்கிரகித்தார்.

காலங்கள் கடந்தோடின. ஒருநாள் நள்ளிரவு 12 மணி அளவில் ஆவணி மாதத்தில் 16 வயது பிரம்மச்சாரியாக நாரதர் வேங்கடகவி ரூபமெடுத்து இறங்கி வந்தார். தொடர்ந்து பல சங்கீதங்கள் அந்த கிருஷ்ணனின் மீது இயற்றினார். அந்த சங்கீதங்களைக் கேட்டு அங்கு வந்த அவ்வூர் பிராமணர்கள் நீங்கள் யார்? எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்? எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று வேங்கடகவியை பார்த்து கேட்டார்கள். அதற்கு நானொரு பரதேசி சிறிது காலம் இங்கே தங்கி இந்த கிருஷ்ணனின் மீது சில பாடல்கள் பாட உள்ளேன் எனக் கூறினார். அவர் இந்தக் கண்ணனைப் பார்த்து முதலில் பாடிய கானம்,

"ஆடாது அசங்காது வா கண்ணா!" தொடர்ந்து பல கானங்களை இயற்றினார். அப்பொழுது எங்கள் தலைமுறையில் உள்ள ஒருவர் அர்ச்சகராக அங்கே இருந்து கொண்டிருந்தார். தினமும் காலை வேளையில் சில பிரதிக்க்ஷனங்களை செய்த பிறகு பாட ஆரம்பிப்பார். இந்த ஜென்மாவில் தான் பாடல் பாடி அந்த கண்ணனின் காட்சி பெற வேண்டுமென்றே தினமும் பாடல்களை பாடி வந்தார். கிருஷ்ணனுக்கு ஒரு ஆச்சர்ய குணம் ஒன்று உண்டு. அவன் எதிர்பார்க்கும் சமயத்தில் வரமாட்டான். எதிர்பாராத சமயத்தில் காட்சி கொடுப்பான். மேலும் படிக்க...

இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது / வலைத்தளத்தின் போலிகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்கள், 2013ல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்டவை.
கோவில் வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

https://AcadooGhostwriter.com